என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, September 21, 2026

ரட்சகன் 10

 




யுவராஜ் ஜே.என்.பி.டி சாலையை அடையும் வரை வழியில் போக்குவரத்து அதிகமாகத்தான் இருந்தது. அவன் ரக்ஷா குடோன் அருகே செல்லும் போது போக்குவரத்து குறைந்திருந்தது. அந்த குடோன் ஒரு தனியார் குடோன். காலை ஆறிலிருந்து இரவு ஒன்பது மணி வரை மிகவும் பரபரப்பாக இருக்கும். அதன் பின் குடோன் மூடப்பட்டு விடும். துறைமுகத்திற்கு அருகில் இருப்பதால் ஒரு காலத்தில் அது இருபத்திநாலு மணி நேரமும் திறந்திருக்கும். எல்லா சமயங்களிலும் சரக்குகள் வந்து போய்க் கொண்டு இருக்கும் என்பதால் எல்லா நேரங்களிலும் அங்குபிசியாக இருக்கும். ஆனால் ஆள் பற்றாக்குறை காரணமாக குடோனை இரவு நேரத்தில் மூடி வைப்பது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதன் உரிமையாளர்கள் முடிவு செய்து விட்டார்கள். அதனால் இப்போது அது பூட்டியிருக்க தான் வாய்ப்பு அதிகம்.

 

ஒருவேளை போதைப் பொருள்கள் அங்கே பதுக்கி வைக்கப்பட்டு இருந்தால் இரவு நேரங்களில் ரகசியமாய் குடோன் பயன்படுத்தப்படும் சாத்தியமுள்ளது என்று யுவராஜ் நினைத்தான். போதைப் பொருள் முடிவில் ஒரு மனிதனை எப்படி மிருகமாகவும், சமூக எதிரியாகவும் ஆக்கி விடுகிறது என்று யுவராஜ் கண்கூடாகப் பார்த்திருக்கிறான். அதை ஒழிக்கா விட்டால் ஒட்டு மொத்த சமுதாயத்தையே அது அழித்து விடும் என்று அவன் உறுதியாக நினைத்தான். அவன் மகன் நீலேஷ் வளர்ந்து வரும் காலத்தில் போதை சூழ்நிலை இருக்கக்கூடாது என்று அவன் ஆசைப்படுகிறான். போதையைப் பயன்படுத்தும் இளைஞர்களில் ஒருவனாக நாளை நீலேஷ் மாறினால் ஒரு தந்தையாக அவனால் தாங்கிக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. அதனால் போதைப் பொருள் ஒழிப்பு அவனுக்கு வெறும் வேலையாக இருக்கவில்லை.  அவனுடைய லட்சியமாகவே இருந்தது.

 

காரை சற்று தூரத்திலேயே நிறுத்தி விட்டு யுவராஜ் குடோனை நோக்கி நடந்தான். ஓரிரு வாகனங்கள் அவனைக் கடந்து சென்றனவே ஒழிய ஆட்கள் யாரும் அப்பகுதியில் இருக்கவில்லை. யுவராஜ் கடிகாரத்தைப் பார்த்தான். மணி 9.55. குல்ஃபி ஐஸ்காரன் வந்து விட்டானா இல்லை இனிமேல் தான் வர வேண்டுமா என்று தெரியவில்லை. குடோன் மூடப்பட்டு இருந்தது. வெளி கேட் பூட்டப்பட்டு இருந்தது. சுற்றும் முற்றும் நோட்டம் விட்டு பின் யுவராஜ் மெல்ல அந்த கேட் ஏறி உள்ளே குதித்தான். உள்பகுதியிலும் யாரும் தென்படவில்லை.

 

யுவராஜ் குடோனின் பின்பகுதிக்குச் சென்றான். அங்கும் யாரும் இருக்கவில்லை. ஆனால் குடோனின் பின்புறக்கதவு லேசாகத் திறந்திருந்ததை யுவராஜ் பார்த்தான். உள்ளே குல்ஃபி ஐஸ்காரன் இருப்பானா இல்லை போதைப் பொருள் கடத்தி விற்பனை செய்யும் ஆசாமிகள் இருப்பார்களா என்று தெரியவில்லை.

 

யுவராஜ் அலைபேசியை எடுத்து குல்ஃபி ஐஸ்காரன் கடைசியாக எப்போது ஆன்லைனில் இருந்தான் என்று அறிய வாட்ஸப்பைப் பார்த்தான். இரவு 8.50க்கு கடைசியாக அவன் வாட்ஸப்பில் இருந்திருக்கிறான் என்பது தெரிந்தது. யுவராஜ் சத்தமில்லாமல் குடோனின் பின்புறக் கதவை அடைந்தான். உள்ளே ஜீரோ வாட்ஸ் பல்பு ஒன்றின் வெளிச்சம் தெரிந்தது. அந்தப் பெரிய குடோனுக்கு அந்த வெளிச்சம் போதுமானதல்ல. அந்த வெளிச்சமும் வலது மூலையிலிருந்து வந்து கொண்டிருந்தது போல் தோன்றியது.

 

உள்ளே எதாவது பேச்சு சத்தம் கேட்கிறதா என்று காதுகளை யுவராஜ் கூர்மையாக்கினான். வலது பக்க மூலையிலிருந்து ஒருவன் பேசுவது மெலிதாக அவனுக்குக் கேட்டது. அவன் யாரிடமோ எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. ஆனால் வேறு யார் பேசுவதும் கேட்கவில்லை. அதிகமான ஆட்கள் இருக்க வாய்ப்பில்லை. யுவராஜ் சத்தமில்லாமல் உள்ளே நுழைந்தான். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று கைக்குட்டையோடு ஒரு கை அவன் முகத்தருகே வருவதை உணர்ந்தான். அவன் வேகமாக சுதாரிப்பதற்குள் நினைவிழந்தான். 

 

முகமதலி யுவராஜ் கீழே விழுந்து விடாமல் இருக்க அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு தரையில் கிடத்தினான். அங்கு மறைந்திருந்த அவனுடைய ஆட்கள் ஐந்து பேர் வேகமாக வந்தனர். முகமதலி தலையை அசைத்தான். முதலிலேயே அவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று அவன் கட்டளைகள் பிறப்பித்து வைத்திருந்ததால்  அவர்களிடம் தற்போது சொல்ல எதுவுமில்லை. அவனுடைய தலையசைப்புவேலையை ஆரம்பிக்கலாம்என்ற சமிக்ஞையைத் தந்தவுடன் அவர்கள் வேகமாகத் தங்களுக்குத் தரப்பட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

 

ஒருவன் யுவராஜின் கால்சட்டைப் பையிலிருந்து கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான். யுவராஜின் காரை இருபது கிலோமீட்டர் தொலைவில் ஆளில்லாத ஒரு பகுதியில் விட்டு விடும் வேலை அவனுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

 

முகமதலி யுவராஜின் அலைபேசியைக் கைப்பற்றி உள்ளே இருந்த சிம்மை வெளியே எடுத்து அலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்தான். இருவர் ஒரு பெரிய மரப் பெட்டியை  எடுத்து வர, வேறு இருவர்  யுவராஜின் வாயையும், கை கால்களையும் கயிற்றால் கட்டினார்கள். அவனை அந்த மரப்பெட்டியில் வைத்துப் பூட்டினார்கள். மரப்பெட்டியில் ஒரு சிறிய துவாரம் யுவராஜ் மூச்சு விடுவதற்கு வசதியாக இருந்தது.

 

மரப்பெட்டியைப் பூட்டி மரப்பெட்டி மீது ஏற்கெனவே அவர்கள் எடுத்து வைத்திருந்த சரக்கு விவரக் காகிதங்களை ஒட்டினார்கள். அரை மணி நேரத்தில் மற்ற எத்தனையோ சரக்குகளுடன் இந்த மரப்பெட்டியும் துறைமுகத்திற்குள் சென்றது. கூடவே முகமதலி செல்லவில்லை. துறைமுக கண்காணிப்பு காமிராவில் பதிவாக அவன் விரும்பவில்லை. அவனுடைய ஆட்கள் மூவர் தான் மரப்பெட்டியுடன் சென்றார்கள்.  கவனிக்க வேண்டிய ஆட்களை முன்கூட்டியே அவர்கள் கவனித்திருந்ததால் தேவையற்ற சோதனையோ, பிரச்சினையோ அவர்களுக்கு இருக்கவில்லை.

 

இரண்டு மணி நேரத்தில் அந்த மரப்பெட்டி பாகிஸ்தான் செல்லும் கப்பலில் சரக்குகளோடு சரக்காக ஏற்றப்பட்டது. அதிகாலை நான்கு மணிக்கு அந்தக் கப்பல் மும்பை துறைமுகத்திலிருந்து கிளம்பியது.  

 

குல்ஃபி ஐஸ்காரனின் மனைவியும் மகனும் இரவு ஒன்பது மணியிலிருந்து அவனைத் தேட ஆரம்பித்தார்கள். எப்போதும் அவன் எட்டு மணியளவில் வீடு வந்து சேர்ந்து விடுவான். ஆள் வரவும் இல்லை, அவன் அலைபேசியைத் தொடர்பு கொண்டால் ஸ்விட்ச்டு ஆஃப் தகவலும் வருகிறது என்பது அவர்களைக் கவலை கொள்ள வைத்தது. மும்பையில் விபத்துகள் அதிகம். எங்காவது ஏதாவது லாரியோ, காரோ வண்டியோடு சேர்த்து அவனை அடித்துக் கொண்டு போய் விட்டதா என்று தான் அவர்கள் ஆரம்பத்தில் கவலைப்பட்டார்கள். நேரம் ஆக ஆக உறவினர்களும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் அவனைத் தேடும் பணியில் சேர்ந்து கொண்டார்கள். வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் அவனுடைய குல்ஃபி ஐஸ்க்ரீம் வண்டி ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலை அவர்கள் அவன் காணாமல் போனதை போலீஸுக்குத் தெரிவித்து புகார் பதிவு செய்தார்கள்.

 

நிர்ப்பயாவும் பன்னிரண்டு மணி வரை கணவன் வராததால் அலைபேசியில் அவனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தாள். ’ஸ்விட்ச்டு ஆஃப்என்ற அறிவிப்பு வந்தவுடன் அவளுக்குள்ளேயும் கவலை எழ ஆரம்பித்தது. சொன்ன நேரத்தில் வர முடியா விட்டால் கண்டிப்பாகத் தகவல் தெரிவித்து விடும் அளவு பொறுப்பானவன் அழைக்கவில்லை என்றதும் அவளும் விபத்து பற்றியே ஆரம்பத்தில் சந்தேகித்தாள். பின் அவள் அவனுடன் பணி புரியும் ஒரு இன்ஸ்பெக்டரைத் தொடர்பு கொண்டாள். அவருக்கும் அவன் எங்கே சென்றான் என்று தெரியவில்லை. அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனுடன் பணிபுரிபவர்களும், நண்பர்களும் அவனைத் தேட ஆரம்பித்தார்கள். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.    அதிகாலை நான்கு மணியளவில் அவன் கார் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் யுவராஜ் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, September 17, 2026

சதுரங்கம் 36

 


ர்ஜுனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தத் தகவல்கள் அவன் அறியாதவை. அப்பா இது வரை இதையெல்லாம் அவனிடமோ நித்யாவிடமோ சொன்னதில்லை. வருடா வருடம் அவர் இமயமலைக்குப் போய் அங்கு ஒரு வாரம் தங்கி விட்டு வருவார் என்றாலும் அவருடைய பயண அனுபவங்களை அவர் அவர்களிடம் சொன்னதில்லை. அவர்களும் கேட்டதில்லை...

 

அர்ஜுன் கேட்டான். “முதல் தடவை அந்த மகானைப் பார்த்தார் என்கிறீர்கள் சரி. ஒவ்வொரு தடவையும் அந்த மகானை அவர் சந்திக்கிறார் என்று எப்படிச் சொல்கிறீர்கள் சித்தப்பா?”

 

வெறும் அனுமானம் தான்.” என்று ராஜாராம் ஒத்துக் கொண்டார். “முதல் தடவை நண்பர்களோடு ட்ரெக்கிங் போவதற்காகப் போனவன் அடுத்த தடவைகள்ல போனப்ப எல்லாம் அவர்களைக் கூப்பிடக்கூட இல்லை. அதனால் நான் அப்படி நினைக்கிறேன்....”

 

அர்ஜுன் அந்த இரண்டு நண்பர்கள் யாரென்று கேட்டான். இருவரில் ஒருவர் தற்போது உயிரோடு இல்லை என்றும், இன்னொருவர் வெளிநாட்டுக்குச் சென்று அங்கேயே வசிக்க ஆரம்பித்து விட்டார் என்றும் ராஜாராம் சொன்னார்.  சிறிது நேரம் அவரும் அவனும் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் கடல் காட்சியையும், காற்றையும் ரசித்து அனுபவித்தார்கள்.

 

ராஜாராம் அர்ஜுனிடம் மெல்லக் கேட்டார். “என்னடா கல்யாணம் எப்போ? அண்ணா கிட்ட சொல்லிட்டியா?”

 

அப்பா கிட்ட இன்னும் சொல்லலை சித்தப்பா

 

அண்ணா கண்டிப்பாய் மறுக்க மாட்டானேடா.”

 

அது எனக்கும் தெரியும் சித்தப்பா. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வருஷம் போகட்டும்னு நினைக்கிறேன் சித்தப்பா. அதனால தான் சொல்லலை.”

 

அந்தப் பொண்ணு பெயர் என்னடா?”

 

கீதாஎன்று சொன்ன அர்ஜுன் அவளும் வேறொரு பத்திரிக்கையில் நிருபராக இருக்கிறாள் என்பதையும் தெரிவித்தான். பத்திரிக்கையின் பெயரைக் கேட்டுக் கொண்ட ராஜாராம் அதற்கு மேல் கீதாவைப் பற்றிய தகவல்களை அவனிடம் கேட்கவில்லை. இந்தத் தகவல் போதும். இனி மீதியை அவரே தெரிந்து கொண்டுவிட முடியும்.

 

சரி சித்தப்பா நான் கிளம்பறேன்என்று அர்ஜுன் கிளம்பினான். அவர் தலையசைத்தார். அவன் போய் விட்டான். சிறிது நேரம் அவர் மட்டும் கடந்த கால நிகழ்வுகள் குறித்த சிந்தனைகளில் ஆழ்ந்தபடி அங்கே அமர்ந்திருந்தார். முடிவில் அவரும் அங்கிருந்து கிளம்ப எழுந்த போது அவர் மனம் கனத்திருந்தது. ‘சில மனக்கணக்குகள் பொய்த்து விடுகின்றன. பொய்த்து விட வாய்ப்பிருக்கிறது என்ற பிரக்ஞையாவது முன்பே இருந்திருந்தால் கூட, சில முடிவுகளை வேறு விதமாக எடுத்திருக்கலாம். என்ன செய்வது? வாழ்க்கைக் கடிகாரத்தில் பின்னுக்குத் திருப்பும் வசதியில்லையே!’

 

ர்ஜுன் நித்யாவிடம் சித்தப்பாவின் கடற்கரை பங்களாவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்க, நித்யாவும் மிகுந்த உற்சாகத்துடன் அண்ணன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். முடிவில் கேட்டாள். “அதை சித்தப்பா எப்போ வாங்கினார்?”

 

சரியாய் தெரியலை. கிட்டத்தட்ட மூனு வருஷம் இருக்கலாம்னு நினைக்கிறேன்.”

 

சித்தப்பா கிரஹப்பிரவேசத்துக்கு ஏன் நம்மளைக் கூப்பிடவேயில்லை?”

 

அந்தக் கேள்வியை அர்ஜுனும் அங்கிருந்து வருகையில் தனக்குள் கேட்டுக் கொண்டிருந்தான். ஒரே ஒரு பதில் தான் அவனுக்குக் கிடைத்தது. அதை அவளிடமும் சொன்னான். “கூப்பிட்டிருந்தால், அதை வாங்க உனக்கு எப்படி பணம் கிடைச்சுதுன்னு அப்பா அவரைக் கேட்டுடுவாரோன்னு தவிர்த்து இருக்கலாம்னு தோணுது.”

 

நித்யா புன்னகையுடன் சொன்னாள். “இருக்கும். அப்பாக்கு மட்டும் ஏன் அண்ணா அந்த மாதிரி ஆசையெல்லாம் வர மாட்டேங்குது?”

 

சித்தப்பா சொன்னது அர்ஜுனுக்கு நினைவு வந்தது. ”கடவுள் குற்றங்குறையில்லாத ஒரு நிறைமனிதனைப் படைக்க ஆசைப்பட்டு அண்ணாவைப் படைச்சாரோன்னு நான் சில சமயங்கள்ல ஆச்சரியப்பட்டதுண்டு.” அவர் சொன்னதை அவன் தங்கையிடம் சொல்ல அவள் பெருமிதத்துடன்  சொன்னாள். “அப்பா க்ரேட். இல்லையா அண்ணா?”

 

இருக்கலாம் நித்யா. ஆனால் அது அவரை எந்த மாதிரியான வாழ்க்கை நிலைல வெச்சிருக்குன்னு யோசிக்கறப்ப அது முட்டாள்த்தனம் கூடன்னு தோணுது.”

 

அவள் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். அவன் கேட்டான். “உனக்கு அப்படித் தோணலையா நித்யா?”

 

இல்லை அண்ணா. திருடனுக்கும், கொள்ளையடிக்கறவனுக்கும் கூட அதைச் செய்யாதவங்க முட்டாள்களாய் தோணலாம்.  ஆனால் அதை நம்மால ஏற்றுக்க முடியுமா அண்ணா?”

 

அர்ஜுன் தங்கையைப் பெருமிதத்தோடு பார்த்தான். அவள் சொல்வதும் சரிதான்... அவளிடம் அவன் சித்தப்பா சொன்ன இமயமலைச் சம்பவத்தையும் சொன்னான்.  அவளும் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டாள். “அண்ணா நாம அப்பா கிட்ட நேரடியாய் இதைக் கேட்டால் என்ன?”

 

நீ கேளுஎன்றான் அர்ஜுன். வாயாடியான அவள் அவரைப் பல முறை கேள்விகளால் துளைத்திருக்கிறாள். அதனால் அவள் கேட்பது அவருக்கு வித்தியாசமாய்த் தெரியாது..

 

ன்றிரவு செய்திகளில் ஒரு அமைச்சரின் காரசாரமான பேச்சு விவாத விஷயமாக இருந்தது. அவர் ஒரு மதத்தினரின் உணர்வுகளைப் புண்படும் வகையில் பேசியிருந்தார்.

 

இனி சில நாட்களுக்கு இது தான் இங்கு பேசுபொருளாக இருக்கும் என்பது அர்ஜுனுக்குப் புரிந்தது. அரசியலில் அரசியல்வாதியின் ஒவ்வொரு பேச்சுக்கும் காரணம் உண்டு. எதுவுமே உணர்ச்சிவசப்பட்டோ, வாய்தவறியோ வந்துவிடுவதில்லை. எல்லாமே கணக்கு போட்டு பேசப்படுபவை, அல்லது பேசத் தவிர்ப்பவையாகத் தான் இருக்கும். இது போன்ற பேச்சுக்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசப்படுபவை போலத் தோன்றினாலும், இவை மக்கள் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தினாலேயே பேசப்படுபவை. ஆளும் கட்சிக்குப் பிரச்சினையான ஒன்றின் மீது மக்கள் கவனம் போகக்கூடாது என்னும் அவசியம் வரும் போது இப்படி வில்லங்கமாக எதையாவது பேசி  மக்கள் கவனத்தைத் திருப்பவென்றே சிலர் இருக்கிறார்கள்.

 

ஆனால் இப்போதைக்கு ஆளும் கட்சிக்குப் பிரச்சினையாகும் பெரிய விஷயம் எதுவும் இல்லை. இப்போது தேர்தலும் நெருக்கத்தில் இல்லை. பின் ஏன் இந்த ஆள் இப்படிப் பேசுகிறார் என்று அர்ஜுன் யோசித்தான். செய்திகளில் அடுத்து நர்மதாவின் வீட்டு சிசிடிவி கேமிரா இரண்டு நாட்கள் முன்பே பழுதாகி விட்டிருக்கிறது என்றும் அதை அவள் சரிப்படுத்தாமல் வைத்திருப்பது விரக்தியாலும், தற்கொலை எண்ணத்தாலும் என்று போலீஸார் நினைப்பதாகவும் செய்தி வாசித்தார்கள். அன்று காலை தான் நர்மதாவின் தங்கை தமிழக போலீசார் மந்தமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தாள். நர்மதாவின் கொலையைத் தவிர வேறு எதுவும் பரபரப்பாக இங்கு நடந்து விடவில்லை. அதிலும் கூட அவனைப் போன்ற சிலர் தான் ஆளும் கட்சியைச் சேர்ந்த யாரோ இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறார்களே ஒழிய பொதுமக்கள் அந்த வகையில் இன்னும் யோசிக்க ஆரம்பிக்கவில்லை. அப்படி மக்கள் யோசிக்க ஆரம்பிப்பதற்கு முன் அவர்கள் கவனத்தைத் திருப்ப நினைக்கும் முன்னெச்சரிக்கையோ? அந்த வகையில் அவன் யோசிக்க ஆரம்பித்த போது, நர்மதா கொலை பற்றித் தீவிரமாக விசாரிப்பது முக்கியமாக அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது.

 

ன்றிரவிலேயே ராஜாராமுக்கு கீதா பற்றிய அனைத்து தகவல்களும் வந்து சேர்ந்தன. கீதாவின் தந்தை ஒரு அரசு வங்கியில் மேலாளராக வேலை பார்க்கிறார். அம்மா இல்லத்தரசி. கீதாவின் தம்பி பத்தாவது படிக்கிறான். அவர்கள் வசிக்கும் வீடு சொந்த வீடு. கீதா பட்டதாரி. ’நாட்டு நடப்புபத்திரிக்கையில் மூன்று வருடங்களாக அவள் நிருபராக வேலை பார்க்கிறாள். அவள் இப்போது வாங்கும் மாத சம்பளம் பெட்ரோல் செலவு நீங்கலாக ரூ.21000/- கலகலப்பான நல்ல பெண். அவளும்  அர்ஜுனும் மூன்று வருடங்களாகப் பழகுகிறார்கள். அவர்கள் இருவரும் காதலர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் மற்ற பல நிருபர்களுக்கு இருக்கிறது....

 

யசோதா மகனிடம் பேச சமயம் பார்த்துக் காத்திருந்தாள். மைதிலி தன் இளைய சகோதரியுடன் தினமும் இரவு ஒன்பதரை மணிக்குப் பேச ஆரம்பிப்பது வழக்கம். அப்படிப் பேசுகையில் அவள் மொட்டை மாடிக்குச் சென்று விடுவாள். அவள் அப்படிச் சென்ற அடுத்த நிமிடம் யசோதா மகன் அறைக்கு வந்தாள். “அர்ஜுன் என்னடா சொல்றான்?”

 

அத்திவாக்கம் போனதைப் பற்றி இன்னைக்கும் அவன் மூச்சு விடலை. கல்யாணம் எப்படான்னு கேட்டேன். இன்னும் ஒரு வருஷம் கழிச்சுன்னு சொல்றான். அவன் அந்தப் பெண்ணைக் காதலிக்கிறதைப் பற்றி இன்னும் அண்ணா கிட்ட பேசலையாம்...”

 

யசோதா முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. அவள் மெல்லக் கேட்டாள். “அந்தப் பொண்ணைப் பற்றி எதாவது விவரம் தெரிஞ்சுதா?”

 

தனக்குக் கிடைத்த விவரங்களை ராஜாராம் அவளிடம் சொன்னார். அவர்கள் குடும்ப கௌரவத்திற்கு பெண்ணின் குடும்பம் போதாது தான். ஆனாலும் பெரிதாகக் குறை சொல்ல எதுவுமில்லை. அதனால் பேரனுக்கு மனைவியாகப் போகும் பெண் குறித்து அதிருப்தி எதையும் அவள் உணரவில்லை. ஆனால் ஒரு வருடம் கழித்து தான் அவன் திருமணம் செய்து கொள்வதாக உள்ளான் என்பது தான் அவளை அதிருப்தியடைய வைத்தது. ஆனால் அந்த விஷயத்தில் அவள் எதுவும் செய்வதற்கில்லை. அன்று முழுவதும் அவள் மனம் பேரனைச் சுற்றியே இருந்தது. தேவையில்லாமல் அவன் பழைய விஷயங்களைக் கிளறாமல் இருந்தால் போதும் என்று அவள் மனம் பிரார்த்தித்தது.


(தொடரும்)

என்.கணேசன்

 

Monday, September 14, 2026

ரட்சகன் 9

 


முகமதலி யுவராஜைப் பற்றி வேண்டிய அளவு தகவல்களைச் சேகரித்து விட்டான். மிக நேர்மையான, தைரியமான அதிகாரி. மூன்று வருடங்களுக்கு முன் ஐபிஎஸ் தேர்வு பெற்றதிலிருந்து அவன் மும்பையின் போதை தடுப்புப் பிரிவில் தான் பணிபுரிகிறான். மும்பையில் பாலிவுட் நடிகர் நடிகைகளிலிருந்து உயர்பள்ளி மாணவர்கள் வரை போதைப் பழக்கம் தலைவிரித்தாடுகின்றது. அரசியல்வாதிகள், மேலதிகாரிகள் தரும் ரகசிய ஆதரவு காரணமாக அங்கு போதைப் பொருள் புழக்கத்தை இதுவரையில் யாராலும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடிந்ததில்லை. ஆனாலும் யுவராஜ் தன்னால் முடிந்த வரை அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறான். இதுவரை இரண்டு முறை பெருமளவில் போதைப் பொருள்களை அவன் கைப்பற்றியிருக்கிறான். இது வரை சில்லறை விற்பனையாளர்கள் இருபத்தியிரண்டு பேரை அவன் கைது செய்திருக்கிறான்.

 

முகமதலி புன்னகைத்தான். அவர்களுடைய இயக்கமும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளுக்கு போதைப் பொருள்களைக் கடத்தி வருகிறது. அவர்கள் மொத்த விற்பனையாளர்களே ஒழிய சில்லறை விற்பனையாளர்கள் அல்ல. சில்லறை விற்பனையிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தால் இன்னேரம் யுவராஜும் அவர்களுக்குப் பரிச்சயம் ஆகியிருப்பான்.

 

இதற்கு முன் இரண்டு முறை பெருமளவில் போதைப் பொருளை அவன் கைப்பற்றியிருக்கின்ற தகவல் முகமதலியை யோசிக்க வைத்தது. முதல் முறை கைப்பற்றியது ஒன்றரை வருடங்களுக்கு முன்பு. இரண்டாவது முறை கைப்பற்றியது நான்கு மாதங்களுக்கு முன்பு. அந்தச் செய்திகளை முகமதலி விரிவாகப் படித்தான். யாரோ தகவல் தராமல் அந்த அளவு போதைப் பொருள்களை யுவராஜ் கைப்பற்றியிருக்க முடியாது. போலீஸுக்குத் தகவல் தருவதன் மூலம் ஒரு பெரிய தொகையை அந்தத் தகவல் தருபவன் பெற்றிருக்க வேண்டும். போலீஸுக்குத் தகவல் தருபவர்கள் பெயர் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றாலும் அதைக் கண்டுபிடிப்பது கஷ்டமல்ல. கஷ்டமாக இருந்தால் கூட அதைக் கண்டுபிடித்தாக வேண்டிய நிலைமையில் முகமதலி இருக்கிறான்.

 

அவர்களுடைய இயக்கத்துக்கு உதவக்கூடிய ஆட்கள் எல்லா இடங்களிலும் ஊடுருவியிருக்கிறார்கள். பலர் பல முக்கிய வேலைகளில் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் கடைசி வரை மற்றவர்களால் கண்டுபிடிக்கப்பட மாட்டார்கள். தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் எந்த முட்டாள்த்தனமும் அவர்கள் செய்வதில்லை. இயக்கமும் முடிந்த அளவு அவர்களை வெளிப்படுத்தாதபடியே பார்த்துக் கொள்ளும். ஏனென்றால் அவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் மிக முக்கியம். அவர்கள் சிக்கிக்கொண்டால் தகவல்கள் கிடைப்பது நின்று போகும்.

 

முகமதலி தன்னிடம் உள்ள தகவல் பேழையில் தேடி ஒரு எண்ணைக் கண்டுபிடித்து அதை ஒரு பாதுகாப்பான அலைபேசி மூலம் அழைத்தான்.

 

ஹலோஒரு பெண் குரல் கேட்டது.

 

நான் எம்.. எண் 3025”

 

மறுபக்கம் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முகமதலி பொறுமையாகக் காத்திருந்தான். அந்தப் பெண் அவன் சொன்ன எழுத்துக்களையும், எண்ணையும் ஒப்பிட்டுப் பார்த்துத் திருப்தியடைந்தால் மறுபடி அழைப்பாள். அவன் சொன்னதில் ஏதாவது பிழை இருந்தால் மறுபடி அழைப்பு வராது. அவன் அழைத்தாலும் அந்த எண்ணில் பதிலிருக்காது.

 

மூன்று நிமிடங்கள் கழித்து அவள் மறுபடி அழைத்தாள். “என்ன வேண்டும்?”

 

முகமதலி யுவராஜ் பெரிய அளவில் இரண்டு முறை போதைப் பொருள்களைக் கண்டுபிடித்த தேதிகளையும், கிடைத்த இடங்களையும் சொல்லி விட்டுக் கேட்டான். “எனக்கு அந்தத் தகவல் தந்த ஆளின் பெயரும், விலாசமும் வேண்டும்.”

 

பொதுவாக இது போன்ற கோரிக்கை சொல்லப்பட்டவுடன் மறுபக்கத்தில் அலைபேசி வைக்கப்பட்டு விடும் - முன்பு எழுத்துக்களையும், எண்ணையும் சொன்னவுடன் வைக்கப்பட்டது போல. ஆனால் அந்தப் பெண் உடனே அலைபேசியை வைக்கவில்லை. அவள் சொன்னாள். “இப்போதெல்லாம் கெடுபிடிகள் அதிகம். சந்தேகம் எழுந்தால் முக்கிய விவரங்களை யார் பார்க்கிறார்கள் என்கிற விவரங்களை அவர்களால் கண்டுபிடித்து விட முடியும்.”

 

முகமதலி எரிச்சலடைந்தான். “அது எனக்கும் தெரியும். இது முக்கிய வேலைக்கு வேண்டிய அத்தியாவசியத் தகவல்.”

 

சொல்லி விட்டு அவன் அலைபேசி இணைப்பைத் துண்டித்தான்.  அரை மணி நேரம் கழித்து அந்தப் பெண் அவனை அழைத்து ஒரு பெயரையும், விலாசத்தையும் சொன்னாள்.

 

முகமதலி சரியாக இரண்டு மணி நான்கு நிமிடங்களின் முடிவில் அந்த ஆள் குறித்து அனைத்து தகவல்களையும் பெற்றிருந்தான். அந்த ஆள் குல்ஃபி ஐஸ் விற்பவன். அவன் வியாபாரத்திற்கு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பகுதிக்குச் செல்பவன். அப்படிப் போகும் போது தகவல்களைப் பெற்று போலீஸுக்குத் தெரிவிப்பான் போல் தெரிந்தது.

 

தள்ளுவண்டியில் குல்ஃபி ஐஸ் விற்கும் அவனை யார் பார்வையிலும் படாமல் ஆக்கிரமிப்பது முகமதலிக்குச் சுலபமான வேலையாக இல்லை. ஒரு நாள் முழுவதும் அவனை ரகசியமாகப் பின் தொடர்ந்து மாலை ஏழு மணியளவில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத வீதியில் முகமதலி அவனை அணுகினான்.

 

ஒரு குல்ஃபி ஐஸ் அவனிடம் வாங்கிப் பணத்தைத் தந்தபடியே முகமதலி தாழ்ந்த குரலில் சொன்னான். “யுவராஜ் சார் என்னை அனுப்பினார்.?”

 

ஐஸ்காரன் குழப்பத்துடன் கேட்டான். “எந்த யுவராஜ்?”

 

யுவராஜ் ஐபிஎஸ்.”

 

ஐஸ்காரன் முகமதலியைக் கூர்ந்து பார்த்தான். முகமதலி சொன்னான். “சார் அந்த சிவப்புக் காரில் இருக்கிறார். ஐந்து நிமிடம் பேச வேண்டுமாம். அவர் இங்கே வந்து உன்னுடன் பேசுவதை யாரும் பார்ப்பதை அவர் விரும்பவில்லை. அதனால் வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு வா...”

 

ஐஸ்காரன் சுமார் நூறு அடி தள்ளி நிற்கும் சிவப்புக் காரை பார்த்தான். உள்ளிருந்து யாரோ கையசைப்பது தெரிந்தது.

 

ஐஸ்காரன் வண்டியை ஒரு ஓரமாகத் தள்ளி நிறுத்தினான். பின் அவன் முகமதலியுடன் காரை நோக்கி நடந்தான். முகமதலி காரின் பின் பக்கக் கதவைத் திறந்து ஐஸ்காரனைப் பார்த்து தலையசைத்தான். “சீக்கிரம் பேசி விட்டு வா

 

ஐஸ்காரன் குனிந்து உள்ளே பார்த்தான். அந்தச் சமயத்தில் முகமதலி வேகமாய் ஐஸ்காரனை உள்ளே தள்ள, உள்ளே இருந்து ஒருவன் வேகமாய் ஐஸ்காரனை உள்ளே இழுத்தான். ஐஸ்காரன் சுதாரிப்பதற்குள் மயக்க மருந்து தடவிய கைக்குட்டை அவன் மூக்கைப் பதம் பார்த்தது. ஐஸ்காரன் நினைவிழந்து மயக்கமானான். சிவப்புக் கார் வேகமாக அங்கிருந்து பறந்தது. 

 

ரை மணி நேரம் கழித்து யுவராஜுக்கு ஐஸ்காரனிடமிருந்து ஒரு குறுந்தகவல் வந்து சேர்ந்தது. ”ஒரு முக்கியத் தகவல் இருக்கிறது. ஜே.என்.பி.டி சாலையில் உள்ள ரக்ஷா குடோனின் பின்புறம் இன்று இரவு பத்து மணிக்கு வரவும்.”

 

அந்தத் தகவலில் பெயர் எதுவும் இல்லை என்றாலும் அதை அனுப்பியிருப்பது குல்ஃபி ஐஸ்காரன் தான் என்பதில் யுவராஜுக்கு சந்தேகம் இருக்கவில்லை. அந்த அலைபேசி எண் குல்ஃபி ஐஸ்காரனுடையது தான். இதற்கு முன் தகவல் தெரிவித்த போது கூட ஒரு முறை நேரடியாகப் பேசியும், ஒரு முறை இப்படி அனுப்பியும் தான் இருந்தான் என்பதால் யுவராஜ் இதில் தில்லுமுல்லு எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை.

 

யுவராஜ் கடிகாரத்தைப் பார்த்தான். மணி 7.40. காரில் போனால் பல சிக்னல்களைத் தாண்டிப் போய்ச் சேர்வதற்கு இரண்டு மணி நேரம் தேவைப்படும். வழியில் ஏதாவது ஓட்டலில் சாப்பிட்டுப் போனால் ஐஸ்காரன் சொல்லும் பத்து மணியாகி விடும்.

 

யுவராஜ் நிர்ப்பயாவை அழைத்து இன்று வரத் தாமதமாகும் என்று சொன்னான்.

 

அவள் கேட்டாள். “எத்தனை மணியாகும்?”

 

இரவு பத்து மணிக்கு மேல் போக்குவரத்து குறைய ஆரம்பிக்கும் என்பதால் ரக்ஷா குடோன் பகுதியிலிருந்து வீட்டுக்கு ஒரு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். “பதினொன்றரைக்கு வந்துடுவேன். சாரி. ஒரு முக்கியமான வேலை....”

 

அவன் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவனுடைய வேலை அவனைப் பல சமயங்களில் நடுநிசிக்குத் தான் வீட்டுக்குப் போக அனுமதித்திருக்கிறது. ஆனால் ஒரு முறை கூட அவள் சலித்துக் கொண்டதோ, கோப்ப்பட்டதோ கிடையாது. அதுவே அவனுடைய குற்ற உணர்ச்சியை எப்போதும் அதிகப்படுத்தும். எந்த மாதிரி ஒரு வாழ்க்கையை அவன் அவளுக்குக் கொடுத்திருக்கிறான்...

 

பரவாயில்லைங்க. உங்க பையனுக்கு இப்பவே குட் நைட் கிஸ் குடுத்துடுங்க. இல்லாட்டி தூங்க மாட்டான்.” சொல்லி விட்டு நிர்ப்பயா அலைபேசியை மகன் காதில் வைத்தாள்.

 

நீலேஷிடம் யுவராஜ் இன்று இரவு வரத் தாமதமாகும் என்றும் நீலேஷ் சமர்த்தாகத் தூங்க வேண்டும் என்றும் சொல்லி இரவு முத்தத்தை அலைபேசி வழியே அனுப்பினான். மழலை மொழியில் தந்தையிடம் சிறிது கதை பேசி விட்டு நீலேஷும் தந்தைக்கு முத்தத்தை அனுப்பி வைத்தான்.

 

அவர்களிடம் பேசி விட்டு யுவராஜ் காரில் கிளம்பினான்.


(தொடரும்)

என்.கணேசன்