என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 7, 2025

சாணக்கியன் 173

 

சாணக்கியர் சொன்னார். ”பர்வதராஜனே. கொடுத்த வாக்கு மாறுவதும், மானமிழந்து வாழ்வதும் ஒன்று என்ற கொள்கையில் இருப்பவன் நான். அதனால் அவன் அப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் என்னால் மறுக்க முடியவில்லை. அதை நான் ஒத்துக் கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று

 

பர்வதராஜன் உடனே சொன்னான். “நீங்கள் ஒத்துக் கொண்டாலும் சந்திரகுப்தன் ஒத்துக் கொள்ள வேண்டியதில்லையே. அவனுக்குத் தன் திருமணத்தை முடிவெடுத்துக் கொள்ளும் பரிபூரண சுதந்திரம் இருக்கிறதல்லவா? அதனால் அவன் தாராளமாக மறுக்கலாமே.”

 

சந்திரகுப்தன் சொன்னான். “ஆச்சாரியர் வாக்கு மாறினார் என்ற பழிச்சொல் என்னால் வருவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் நானும் இத்திருமணத்திற்குச் சம்மதித்து விட்டேன்.”

 

சாணக்கியர் சொன்னார். “இவனைப் போன்ற ஒருவன் என் மாணவனாக இருப்பது என் பாக்கியமே அல்லவா பர்வதராஜனே. திருமணத்திற்கு நான் ஒத்துக் கொண்டாலும் திருமணம் முடியும் வரை தனநந்தன் இங்கிருக்க முடியாது என்று மிகத் தெளிவாகச் சொல்லி விட்டேன். அவன் மகளின் தாய் வேண்டுமானால் இங்கிருக்கட்டும், அவன் நான் சொன்னபடி இன்றைய சூரியாஸ்தமனத்திற்கு முன் போய் விட வேண்டும் என்று சொல்லி விட்டேன். அவன் இப்போது கிளம்பிக் கொண்டிருக்கிறான். அவன் கிளம்பும் போது வெறும் கையில் போவது அவன் மகள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தி விடும் என்று தோன்றியதால் அவன் ரதத்தில் அவன் மனைவி, உடைகள் சேர்ந்த பின் மீதமிருக்கும் இடத்தில் எத்தனை செல்வத்தை அவனால் கொண்டு செல்ல முடியுமோ அத்தனை செல்வத்தையும் கொண்டு செல்லவும் அனுமதித்திருக்கிறேன். அது அதிகமாக இருக்க முடியாது என்றாலும் அந்த அனுமதியை அவனுக்கு நான் தந்திருக்கிறேன். நாம் செல்வத்தைப் பிரிக்கும் போது எங்கள் பங்கிலிருந்து அந்தச் செல்வத்தை நீ கழித்துக் கொள்ளலாம்.”

 

அதற்கு மேல் பர்வதராஜனுக்கு ஆட்சேபணை சொல்ல எதுவுமில்லாமல் இருந்தது அவர் பேச்சு என்றாலும் பர்வதராஜன் தன் அதிருப்தியைத் தெரிவிக்க நினைத்தான். “வெற்றிக்குப் பின் தனநந்தன் விஷயத்தை நீங்களாகவே தீர்மானித்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை நான் வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன் ஆச்சாரியரே

 

சாணக்கியர் அவன் அதிருப்தியில் எந்த விதமான பாதிப்பும் அடையாதவராகச் சொன்னார். “நீ விருப்பு வெறுப்பின்படி சிந்திப்பதைத் தாண்ட வேண்டும் என்று உனக்கு அறிவுறுத்த வேண்டியவனாக நானிருக்கிறேன் பர்வதராஜனே. தனநந்தன் எனக்குப் பரம எதிரியாக இருந்த போதும் இந்த வேளையில் அந்த வெறுப்பு நாம் எடுக்கும் முடிவுகளைத் தீர்மானிப்பது தவறு என்று நான் நினைக்கக் காரணமே மக்களின் மனதில் நம் மீது நன்மதிப்பு குறைந்துவிடக்கூடாது என்பதால் தான்

 

பர்வதராஜன் எரிச்சலுடன் கேட்டான். “மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ஆச்சாரியரே? நம் தீர்ப்பை அனுசரிக்க வேண்டியவர்கள் அல்லவா அவர்கள்?” 

 

சாணக்கியர் சொன்னார். “நாம் இன்று மகதத்தை வெல்ல முடிந்ததற்கு முக்கிய காரணம் மக்களுக்கு தனநந்தன் மீதிருந்த அதிருப்தியும் என்று நீ மறந்து விடக்கூடாது பர்வதராஜனே. நமக்கு நாளை எதிரிகள் உருவானால் மக்கள் அவர்களுக்கு ஆதரவான நிலை எடுத்து விடும் முட்டாள்தனத்தை நாம் செய்துவிடக் கூடாது.”

 

ஆனாலும் தனநந்தனுக்கு அவ்வளவு கருணை காட்டியிருக்கத் தேவையில்லை. அவன் இனியும் நமக்கு எதிராக நடந்து கொள்ள மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?”

 

அப்படி நடந்து கொண்டால் தயவு தாட்சண்யம் இல்லாமல் அவனைத் தண்டிப்பேன் பர்வதராஜனே. அதற்கு மேலும் கருணை காண்பிக்க நான் கடவுள் அல்ல. என் கொள்கை ஒன்றே ஒன்று தான். நான் எப்போதும் நியாயமாக நடந்து கொள்வேன். கொடுத்த வாக்கை என்றும் மீற மாட்டேன். ஆனால் அதையே என் பலவீனமாக நினைத்து யாராவது எதிராகச் சதியில் ஈடுபட்டால் அதே வழியில் அவர்களைக் கையாளத் தயங்க மாட்டேன்.”

 

அவர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னதைக் கேட்டு பர்வதராஜன் சிறிது மௌனம் சாதித்து விட்டுக் கேட்டான். “ராக்ஷசர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையா ஆச்சாரியரே?”

 

அவர் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் வேலையாட்கள், காவலர்களிடம் விசாரித்து வருகிறேன். அவர் எங்கேயாவது மறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றால் அது எந்த இடம் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன்.. இது வரை திட்டவட்டமாக எதுவும் தெரியவில்லை.... இங்கு இருக்கும் பணியாள் ஒருவன் கூட அவர் வீட்டில் பணி புரிந்தவன், அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவனையும் விசாரிக்க வேண்டும்...”

 

பர்வதராஜன் சுசித்தார்த்தக்கை சத்தமாக அழைக்க, சுசித்தார்த்தக் தயங்கியபடி அங்கே வந்தான். சாணக்கியர் அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “நீ எத்தனை ஆண்டுகளாக ராக்ஷசரிடம் பணி புரிந்தாய்?”

 

பத்து வருடங்கள் இருக்கும் பிரபு

 

அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் நீ என்றும் அவர் ரகசியங்கள் பலவும் அறிந்தவன் நீ என்றும் கேள்விப்பட்டிருந்தேனே அது உண்மை தானா?”

 

சுசித்தார்த்தக் பதறியபடி சொன்னான். “யாரோ புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள் பிரபு. அவர் பணியாட்களிடம் எல்லாம் நெருக்கமாக இருப்பவர் அல்ல. எல்லோரையும் ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே வைத்திருக்கக்கூடியவர். எப்போதும் கடுகடுவென்றே இருப்பவர் என்பதால் தான் அவர் சொந்தப் பெயரை விட்டு விட்டு அவரை ராக்‌ஷசர் என்று அனைவரும் அழைக்கிறார்கள்...”

 

அவர் தற்போது எங்கேயிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா?”

 

சத்தியமாகத் தெரியாது பிரபு

 

சாணக்கியர் யோசித்தபடி அவனையே கூர்ந்து பார்த்திருந்து விட்டு அவனை அனுப்பி விட்டார். பின் அங்கிருந்து கிளம்பியவர் பர்வதராஜனிடம் ரகசியமாய் சொன்னார். “எனக்கென்னவோ இவன் கூடுதலாக அறிந்திருப்பான், எதையோ மறைக்கிறான் என்று தோன்றுகிறது. நீ எப்போதும் இவன் மேல் ஒரு கண் வைத்திருப்பது நல்லது.”

 

அவர்கள் போன பின்பு பர்வதராஜன் யோசனையில் ஆழ்ந்தான். மலைகேது தந்தையிடம் கேட்டான். “என்ன யோசிக்கிறீர்கள் தந்தையே?”

 

பர்வதராஜன் சொன்னான். “இந்த இரண்டு தந்திரக்காரர்களையும் எந்த அளவு நம்பலாம் என்று யோசிக்கிறேன் மகனே

 

ஆச்சாரியர் நம்மிடம் எதையும் மறைக்கவில்லையே தந்தையே.”

 

எதையும் அவர் மறைக்கவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும் மகனே. அவர் தனநந்தனிடம் பேசும் போது அங்கு நாமிருக்கவில்லையே. ஆச்சாரியரைப் போன்ற அறிவாளி வாக்குக் கொடுத்து ஏமாறும் ரகமல்ல. எனக்கென்னவோ அவரே தனநந்தனிடம் பேரம் பேசி சந்திரகுப்தனுக்கு துர்தராவைத் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்திருக்கலாம்...”

 

அதனால் அவருக்கென்ன லாபம்?”

 

மகத அரியணையை சந்திரகுப்தனுக்காக அவர் குறித்து வைத்திருப்பதாக என் உள்மனம் சொல்கிறது. அதற்கு அச்சாரமாகவே அவர் சாமர்த்தியமாக அதைச் செய்திருக்கலாம். அவள் அரசியாகிறாள் என்றால் தனநந்தனின் ஆதரவாளர்களும் சந்திரகுப்தனை ஆதரிக்கும் வாய்ப்பிருக்கிறது அல்லவா?   மகதத் தலைநகரையும், முக்கியமான பகுதிகளையும் அவர்கள் எடுத்துக் கொண்டு முக்கியமல்லாத பகுதிகளை நம் தலையில் கட்டப்பார்க்கும் உத்தேசம் அவருக்கு இருக்க வாய்ப்புண்டு. சரி பாதியாய் எல்லாவற்றையும் பிரித்துக் கொள்வது என்று பேசிக் கொண்டோமே ஒழிய எதுயெது யாருக்கு என்று பேசிக் கொள்ளாததை அவர் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது மகனே.”

 

அதற்கு நாம் ஒத்துக் கொள்ளாவிட்டால் அவர் என்ன செய்ய முடியும் தந்தையே?”

 

நாம் கேட்க வேண்டிய கேள்வி அதுவல்ல மகனே, நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விநாம் கேட்பதற்கு அவர் ஒத்துக் கொள்ளா விட்டால் நாம் என்ன செய்ய முடியும் என்பது தான்.”

 

எப்படிப் பிரித்தாலும் கிடைப்பது நமக்கு லாபம் தானே தந்தையே. இந்த வெற்றிக்காக நாம் அதிகம் கஷ்டப்படவில்லையே

 

முட்டாளே. நீயே இப்படிப் பேசினால் எப்படி? அவர் கொடுத்த வாக்கை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நமக்கு மிகுந்த இலாபம் தரும்படியான பகுதிகளையும், செல்வத்தையும் பிரித்தெடுத்துக் கொள்ளத் தான் நாம் யோசிக்க வேண்டுமேயொழிய நமக்கு எதிரான நியாயத்தை நாம் யோசிக்கக் கூடாது....”

 

சரி தான். நாம் கவலைப்பட பெரிதாக எதுவும் இல்லை என்று உங்களிடம் தான் நான் சொல்ல வந்தேன் தந்தையே. நீங்கள் அவரிடம் பேரம் பேசும் போது நான் இதையெல்லாம் சொல்லப் போவதில்லைஎன்ற மலைகேது குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான். “சுசித்தார்த்தக்குக்கு ராக்ஷசர் பற்றிக் கூடுதல் தெரிந்திருக்கும் என்று ஆச்சாரியர் சொல்கிறாரே அவனிடம் நீங்கள் கேட்டுப் பார்த்தால் என்ன? ராக்ஷசரை சிறைப்பிடித்து விட்டால் பின் சாணக்கியர் பங்கீட்டைத் தொடர்ந்து தாமதிக்க முடியாதல்லவா?”

 

(தொடரும்)

என்.கணேசன்    



  

Monday, August 4, 2025

யோகி 114

 

காலையில் யோகாலயத்தின் அலுவலக அறைக்கு ஷ்ரவன் போன போது முன் தினம் போலவே கண்ணன் அங்கே அமர்ந்திருந்தார். வணக்கம் தெரிவித்த ஷ்ரவனிடம் அவன் தங்கியிருக்கும் அறை வசதியாக இருக்கிறதா என்றும் கூட இருப்பவர்கள் யாரெல்லாம் என்றும் விசாரித்தார். அறை வசதியாக இருக்கிறது என்றும், உடன் இருப்பது சுவாமி முக்தானந்தாவும், சுவாமி சித்தானந்தாவும் என்றும் ஷ்ரவன் சொன்னான்.

கண்ணன் நினைவு கூர்ந்து சொல்வது போல் சொன்னார். ”சுவாமி சித்தானந்தாவுக்கு டைப்பாய்டு காய்ச்சல் என்று கேள்விப்பட்டேனே?”

ஷ்ரவன் சொன்னான். “ஆமாம் சுவாமிஜி. திடீரென்று நேற்று அவருக்குக் காய்ச்சல் வந்து அதிகமாகியும் விட்டதுஆஸ்பத்திரியிலேயே இரவு தங்குவது நல்லது என்று டாக்டர் சொன்னார்...”

சுவாமி முக்தானந்தாவால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லையேஎன்று அவனைக் கூர்ந்து பார்த்தபடி கண்ணன் கேட்டார்.

இல்லை... பாவம், வயதாகி விட்ட அவருக்கு உறக்கம் தான் வருவதில்லை போல... சில சமயம் நள்ளிரவிலும் ஏதாவது சொல்கிறார். நான் முதல் நாள் என்னிடம் தான் ஏதாவது பேசுகிறாரோ என்னவோ என்று நினைத்து எழுந்தேன். எனக்கு ஆச்சரியமும் கூட. நாமே எதாவது கேட்டால் கூட தந்தி வாசகம் மாதிரி தான் ஓரிரண்டு வார்த்தைகள் தான் அவர் பேசுகிறார். அப்படிப்பட்டவர் இப்போது ஏன் பேசுகிறார் என்று நினைத்தேன். பிறகு பார்த்தால் அவர் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கிறார். அதுவும் தத்துவார்த்தமான வசனங்கள். இரண்டு நாளில் பழகி விட்டது. அவர் பேசினாலும் விழித்துக் கொள்வதில்லை. நேற்று கூட அவர் எதோ பேசுவது கனவில் கேட்பது போல் கேட்டதையும் மீறி எனக்கு ஆழ்ந்த உறக்கம்என்று புன்னகையுடன் ஷ்ரவன் சொன்னான்.  

கண்ணன் ஷ்ரவன் சொன்ன பதிலில் முழு திருப்தியடைந்தார்.  ஏதாவது கேட்டால் கூட தந்தி வாசகம் போலத் தான் முக்தானந்தா பதில் சொல்கிறார் என்ற தகவல் தான் அவருக்கு வேண்டியிருந்ததுஅவன் சொல்வது பொய்யல்ல என்பது இன்று அவனும், முக்தானந்தாவும் காலை உணவுக்குச் சென்ற போதே அவருக்குத் தெரிந்தது. இருவரும் ஒன்றாகத் தான் அறையிலிருந்து வெளி வந்தார்கள் என்றாலும், சாப்பிடப் போகும் போதும், வரும் போதும், இருவரும் பேசிக் கொள்ளவில்லை. சாப்பிட அமரும் போதும் முக்தானந்தா வழக்கம் போல் தனியாகத் தான் ஒரு ஓரமாக உட்கார்ந்து சாப்பிட்டார். அவர் அவனுடன் அமர்ந்து சாப்பிடவில்லை என்பதும் இருவருக்குள்ளும் திடீர் நட்பு எதுவும் உருவாகி விடவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.  

ஷ்ரவன் வேலையை ஆரம்பித்து ஐந்து நிமிடங்கள் கழிந்த பின் அங்கிருந்து கண்ணன் கிளம்பினார்.

 

பாண்டியனும் கண்ணன் சொன்ன தகவல்களால் திருப்தி அடைந்தார். ஏதாவது பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது என்று தோன்றிய போதெல்லாம், ஒவ்வொரு முறையும் சோதித்துப் பார்த்திருந்தும் ஏன் ஷ்ரவனின் மேல் அவருக்கு சந்தேகம் வருகிறது என்று அவருக்கே புரியவில்லை. யோசித்துப் பார்க்கையில் இந்த மாந்திரீக செய்வினை தான் அவருக்குக் காரணமாகத் தோன்றியது. பழைய தைரியத்தைக் கொஞ்சம் இது களைந்து விட்டது. இந்த தாயத்து மட்டும் இல்லை என்றால் தூங்கியிருக்கவும் முடியாது என்னுமளவு நிலைமை இருக்கும் போது எத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும் போதாது என்று அவர் எண்ணிக் கொண்டார்.

டாக்டர் சுகுமாரன் மூன்று நாட்களுக்கு ஒரு முறை போன் செய்து தன்னுடைய பரிதாபகரமான நிலையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். தாயத்து கழுத்தில் கட்டியிருப்பதால் அவர் வீட்டில் நாய்க்கு வீட்டின் முன்பகுதியில் வரச் சுதந்திரம் இல்லையாம். அதை அவருக்குத் தாங்க முடியவில்லையாம். மனிதர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத சுகுமாரனின் இந்த நாய்ப் பாசம் பாண்டியனுக்கு வேடிக்கையாக இருந்தாலும், டாக்டராலும் முன்பு போல கம்பீரமாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியவில்லை என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.   

சற்று முன் தான் இன்ஸ்பெக்டர் செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவல் அவருக்கு வந்திருந்தது. இடமாற்றம் ஆகி அந்த ஆள் போனது திருநெல்வேலியா தூத்துக்குடியா என்று அவருக்குச் சரியாக நினைவில்லை. அங்கே போயும் ஆவி பேய் தொந்தரவால் பாதிக்கப்பட்டு கடைசியில் பைத்தியமே பிடித்து விட்டதாம். வினோதமாக நடந்து கொள்கிறாராம், ஆவேசப்படுகிறாராம். கூச்சல் போடுகிறாராம். அவர் பின்னால் யாரோ ஒரு பெண் ஆவி இருப்பதைச் சிலரால் பார்க்க முடிந்திருக்கிறதாம். முன்பெல்லாம் இப்படி யாராவது சொல்லி இருந்தால் அவர் வயிறு குலுங்க சிரித்திருப்பார். ஆனால் இப்போது சிரிப்பு வரவில்லை.

எல்லாவற்றையும் சேர்த்து யோசிக்கையில் சைத்ராவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் யாரும் இப்போது நிம்மதியாக இல்லை என்ற உண்மை நிலைமை அவரைச் சுட்டது. அவர் வாழ்க்கையில் கற்ற மிக முக்கிய பாடம் பிரச்சினைகளை வளர்த்தாமல் ஆரம்பத்திலேயே தீர்த்துவிட வேண்டும் என்பது தான். அது தான் சுலபம். அப்படி ஆரம்பத்திலேயே பிரச்சினையை அறிந்து தீர்த்து விடத்தான் இங்கே வேவு பார்க்க அவர் இத்தனை ஆட்களை வைத்திருக்கிறார். பிரச்சினைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து தீவிரமடைய அனுமதிக்கவே கூடாது

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரச்சினைகள் ஒவ்வொன்றாகச் சேர்ந்து கொண்டே போகின்றன. முதலில் கருப்பு ஆடு. அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்ததாக ஏவல் சக்தி என்று தேவானந்தகிரி சொல்லும் ஒரு ஓநாய். அதை விரட்ட முடியாது, உங்களைப் பாதிக்காத மாதிரி தாயத்து கட்டி விடுகிறேன் என்று சொல்லி தேவானந்தகிரி அவரைப் பாதுகாக்கப்பட்ட போதும், அந்த ஓநாய் சுதந்திரமாக அங்குமிங்கும் உலாவுவதைப் பார்க்க முடிந்ததாய் ஷ்ரவன் சொல்கிறான். வெளியே கண்காணிக்கும் ஆட்கள் இருப்பது அடுத்த பிரச்சினை. இப்படி பிரச்சினைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொண்டு போவதை அவரால் சகிக்க முடியவில்லை. ஆனால் எதிரி யாரென்று நிச்சயமாகத் தெரிந்து விட்டால் எதிரியோடு பிரச்சினைகளையும் அவரால் ஒரேயடியாகத் தீர்த்துக்கட்ட முடியும். ஒரு சின்ன துப்பு கிடைத்தாலும் அவரால் மீதியைக் கண்டுபிடித்து விட முடியும். அந்தத் துப்புக்காக பாண்டியன் காத்திருக்கிறார்

 

ஷ்ரவன் இன்றும் வேலைப்பட்டியலைப் பார்ப்பதும், கம்ப்யூட்டரில் டைப் செய்வதுமாகத் தான் வெளிப்பார்வைக்குத் தெரிந்தான். ஆனால் இடையிடையே தன்னுடைய தேடுதல் வேலையையும் செய்தான். சைத்ராவுக்கு வேலைகள் ஒதுக்கப்பட்டு இருந்த நாட்களில் 206 அறை எண்ணில் உள்ள வேறு யாருக்கு என்ன வேலை ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பதைப் பார்த்தான். அந்த நாட்களில் அந்த அறையில் வேறு இருவர் இருந்ததை அவனால் கண்டுபிடிக்க முடிந்தது. ஒருத்தி அபிநயானந்தா, இன்னொருத்தி கவிதானந்தா. அபிநயானந்தாவுக்கு யோகாலயத்தின் விளம்பர வேலை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவள் இணைய தளத்தில் யோகாலயத்தின் சிறப்புகளையும், பிரம்மானந்தாவின் பெருமைகளையும் சொல்லும் கட்டுரைகளையும், யூட்யூப் என்னும் காணொலிகளையும் இணையத்தில் உருவாக்கிக் கொண்டிருப்பவள் என்பது தெரிந்தது. அவளுக்கு இடையிடையே நூலக வேலையும் தரப்பட்டு இருந்தது. 

பிரம்மானந்தா பெண்களின் அமைப்புகளில் சொற்பொழிவு செய்யச் சென்றால் அவருடன் செல்லும் வேலை கவிதானந்தாவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. பெண்களின் அமைப்புகளிலிருந்து யோகாலயத்துக்கு யாராவது பெண் பிரதிநிதிகள் வந்தால் அவர்களை வரவேற்று, ஆவன செய்யும் ஒருங்கிணைப்பாளர் பணியும் அவளுக்கு இடையிடையே தரப்பட்டு இருந்தது.

அவர்கள் இப்போது எந்த அறைகளில் தங்கியுள்ளார்கள் என்று ஷ்ரவன் பார்த்தான். அபிநயானந்தா 240லும், கவிதானந்தா 220லும் தற்போது தங்கி இருக்கிறார்கள். ஒருவருமே ஒரே தளத்தில் இல்லை. ஒருத்தி மேல் தளத்திலும், இன்னொருத்தி கீழ் தளத்திலும் வசிக்கிறார்கள். ஷ்ரவன், அவர்கள் எப்போது 206லிருந்து வேறு அறைகளுக்குச் சென்றார்கள் என்பதைப் பார்த்தான். சைத்ராவுக்கு வேலைகள் ஒதுக்கியதை நிறுத்தியதிலிருந்து ஒரு வாரம் கழித்து தான் அவர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். முக்தானந்தா சொன்னதை வைத்துப் பார்க்கையில் ஒரு வார காலம் அவர்கள் என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்பதைக் கண்காணித்து விட்டுப் பின் அறைகளை மாற்றியிருக்கிறார்கள். தற்போது அறை எண் 206ல் வேறு மூவர் வசிக்கிறார்கள்...


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, July 31, 2025

சாணக்கியன் 172

 

சாணக்கியர் சந்திரகுப்தனிடம் சென்று விஷயத்தைச் சொன்ன போது அவன் திகைப்படைந்தான். அவர் எந்த அளவு தனநந்தனை வெறுத்தார் என்பதை அவன் அறிவான். அவர் இதற்குச் சம்மதித்தது அவன் மனதில் துர்தரா இடம் பிடித்து விட்டாள் என்பதை அறிந்து தான் என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. அவனது ஒரு பார்வையையும், ஒரு சொல்லையும் வைத்து அவன் முழு மனதையும் புரிந்து கொள்ள முடிந்த  அவரது அறிவுக்கூர்மைக்கு இது தெரியாமல் போக வாய்ப்பேயில்லை. அதனால் அவனுக்காக அவர் எதிரியின் மகளை அவன் மனைவியாக ஏற்கவும் தயாரானது அவனுக்கு மிகப்பெரிய தியாகமாகத் தோன்றியது

 

அவன் குரல் தழுதழுக்கச் சொன்னான். “எனக்காக நீங்கள் இதைச் செய்திருக்க வேண்டியதில்லை ஆச்சாரியரே. நான் அவளை மறக்கக் கண்டிப்பாக முயற்சி செய்திருப்பேன்.”

 

சாணக்கியர் மென்மையாகச் சொன்னார். “நீ கண்டிப்பாக முயற்சி செய்திருப்பாய் சந்திரகுப்தா. ஆனால் உன்னால் அவளை மறக்க முடிந்திருக்காது. பின் காலமெல்லாம் இதயத்தின் மூலையில் ஒரு வெறுமையை உணர்ந்த வண்ணம் வாழ்ந்திருப்பாய். உன் மகிழ்ச்சியை விட என் வெறுப்பு எனக்கு முக்கியமல்ல சந்திரகுப்தா. மேலும் நான் தனநந்தனிடம் சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல. வெறுப்பு தேவையில்லாத சுமை. தண்டித்த பிறகும் குற்றவாளியிடம் வன்மம் வைத்திருப்பது, இனி நடக்க வேண்டிய காரியங்களில் இருந்து சிறிதாவது நம் கவனத்தைத் திருடிக் கொள்ளும். அது சரியல்ல. முட்டாள்தனமும் கூட.”

 

சந்திரகுப்தன் கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டான். “எத்தனை பிறவிகள் எடுத்து உங்கள் கடனை நான் தீர்க்க வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லையே ஆச்சாரியரே” என்று சொன்னபடி அவர் காலில் விழுந்து அவன் வணங்கினான். அவன் கண்ணீர் அவர் பாதங்களை நனைத்தது.

 

ர்வதராஜனின் கால்களை அமுக்கிக் கொண்டிருந்த சுசித்தார்த்தக் அவனை அடிக்கடி இரக்கத்துடன் பார்த்தான். ஆரம்பத்தில் அவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதா என்று சந்தேகப்பட்ட பர்வதராஜன் வாய்விட்டே கேட்டான். “உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் என்னை அப்படிப் பார்க்கிறாய்?.”

 

ஒன்றுமில்லை அரசே.... ஒன்றுமில்லை....” என்று சொல்லி விட்டு சுசித்தார்த்தக் பர்வதராஜனின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து அவன் கால்களை அமுக்க ஆரம்பித்தான்

 

பர்வதராஜன் அவன் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கடுமையான குரலில் சொன்னான்.  ”என்ன விஷயம்? மறைக்காமல் உண்மையைச் சொல்.”

 

எச்சிலை விழுங்கியபடி சுசித்தார்த்தக் சொன்னான். “மன்னியுங்கள் அரசே. என் தந்தை என்னை எப்போதுமே அதிகப்பிரசங்கி என்றும் தேவையில்லாமல் அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பவன் என்றும் திட்டுவார். பணியாள், பணியாளாகவே எல்லா சமயங்களிலும் இருக்க வேண்டும் என்றும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவது கடைசியில் எனக்கே பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வார். அவர் சொல்வது உண்மை தான். ஆனால் பிறவிக்குணம் என்று சொல்வார்களே அதை முழுவதுமாக மாற்ற முடியாமல் நான் கஷ்டப்படுகிறேன் அரசே

 

பர்வதராஜன் பொறுமையிழந்து கேட்டான். “அரசனிடம் உண்மையை மறைப்பது ராஜத்துரோகம் என்று உன்னிடம் இதுவரை யாரும் சொல்லியிருக்கவில்லையா சுசித்தார்த்தக்?”  

 

தர்மசங்கடத்துடன் பர்வதராஜனைப் பார்த்த சுசித்தார்த்தக் என்ன சொல்வதென்று தெரியாதவன் போல திருதிருவென்று விழித்து விட்டுச் சொன்னான். “நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரியப்போகிறது என்றில்லை. நீங்கள் அதைப் பிறகு அறிந்து கொள்ளத்தான் போகிறீர்கள். ஆனாலும் எனக்குத் தெரிய வந்த அந்த தகவலை முன்கூட்டியே உங்களிடம் சொல்லி எச்சரிப்பது என் கடமை என்று எனக்குத் தோன்றியது.”

 

பர்வதராஜன் கோபத்துடன் கத்தினான். “சொல்லித் தொலையேன் முட்டாளே?”

 

சுசித்தார்த்தக்  மெல்லக் கேட்டான். “நீங்கள் அந்தத் தகவலைக் கேள்விப்பட்டீர்களா அரசே

 

பர்வதராஜன் பார்வையால் அவனைச் சுட்டெரித்தான். சுசித்தார்த்தக் அவசரமாகச் சொன்னான். “சந்திரகுப்தன் மகத இளவரசியைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் தகவலைத் தான் கேட்டேன் அரசே?”

 

பர்வதராஜன் திகைப்புடன் கேட்டான். “என்ன உளறுகிறாய்?”

 

உளறவில்லை அரசே. உண்மையைத் தான் சொன்னேன். சந்திரகுப்தனும் மகத இளவரசி துர்தராவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். அதற்குப் பிரதியுதவியாய் தனநந்தரிடம் வேண்டிய அளவு செல்வத்தை எடுத்துக் கொண்டு போக சாணக்கியர் அனுமதி தந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.”

 

பர்வதராஜன்  சுசித்தார்த்தக்கைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “பகலிலேயே மதுவருந்தியிருக்கிறாயா சுசித்தார்த்தக்?”

 

சுசித்தார்த்தக் அழாத குறையாகச் சொன்னான். “அப்படியெல்லாம் இல்லை அரசே. நான் கேள்விப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு தான் உங்களிடம் சொல்கிறேன். கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. நீங்கள் வெற்றியில் சமபாதி பங்கு உங்களுக்கிருப்பதாய் அன்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் நீங்கள் அறியாமலேயே இங்கு என்னென்னவோ நடந்து கொண்டு இருக்கிறது என்று தெரிவித்து எச்சரிக்க விரும்பினேன். அவ்வளவு தான். சொன்னது தவறாக இருந்தால் அடியவனைத் தயவுசெய்து மன்னித்து விடுங்கள் அரசே.”

 

பர்வதராஜன் இதற்கும் எதிர்க்கா விட்டால் சரியாகாது என்று நினைத்து உடனே சாணக்கியரைச் சந்தித்து வெளிப்படையாகப் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்த போது சாணக்கியரும், சந்திரகுப்தனும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

 

ர்வதராஜன் பழைய நட்பு, பக்தியுடனேயே எழுந்து சாணக்கியர் காலைத் தொட்டு வணங்கி அவர்களை அமர வைத்து உபசரித்தான். அவன் சற்று முன் சுசித்தார்த்தக் மூலம் கேள்விப்பட்ட தகவல்கள் எதுவும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்திருந்தான். முதலில் ஆச்சாரியரோ, சந்திரகுப்தனோ இதைப் பற்றிச் சொல்கிறார்களா என்று பார்ப்போம். அவர்கள் சொல்லாமல் இருந்தால் அதைப் பற்றிக் கேட்டு அவர்கள் திருட்டுத்தனம் தெரிந்து விட்டது என்று காட்டிக் கொள்வோம் என்று நினைத்தான்.

 

அவர்கள் வந்த பின் கூட அங்கிருந்து போகாமல் ஒரு ஓரமாக நின்றிருந்த சுசித்தார்த்தக்கை சாணக்கியர் கடுமையான பார்வை பார்க்க அவன் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான்.

 

பர்வதராஜன் சொன்னான். “ஆச்சாரியரே உங்கள் தரிசனம் கிடைப்பது மிக அரிதாக இருக்கின்றது என்று சற்று முன் தான் மலைகேதுவிடம் சொன்னேன்.”

 

சாணக்கியர் சொன்னார். “பழைய நிர்வாகத்திலிருந்து நம் நிர்வாகத்திற்கு மகதத்தைக் கொண்டு வருவது பெரிய வேலையாக இருக்கிறது பர்வதராஜனே. அதோடு முடிக்க வேண்டிய வேறுபல வேலைகளும் நிறைய இருக்கின்றன

 

பர்வதராஜன் சொன்னான். “அதனால் தான் அந்தப் பணிச்சுமையை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று உங்களிடம் பல முறை சொன்னேன். நீங்கள் தான் கேட்கவில்லை ஆச்சாரியரே

 

சாணக்கியர் சொன்னார். “சில வேலைகளை ஒருவரே கவனித்துக் கொள்வது அனாவசியக் குழப்பங்களைத் தவிர்க்கும் என்று தான் நான் அதைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கின்றேன் பர்வதராஜனே. ராக்ஷசரும் பிடிபட்டு, மகதப்படைகளும் பல பகுதிகளில் இருந்தும் திரும்பி வந்த பிறகு நாம் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அப்போது உனக்கும் ஓய்வு இருக்கப் போவதில்லை

 

பேசும் அளவிலாவது ஆச்சாரியர் முந்தைய ஒப்பந்தத்தை நினைவு வைத்திருப்பது பர்வதராஜனுக்குச் சிறிது ஆறுதல் தந்தது. அவன் மெல்லக் கேட்டான். “நல்லது ஆச்சாரியரே. இங்குள்ள பணிகள் எந்த அளவில் இருக்கின்றன?”

 

சாணக்கியர் மிக வருத்தப்படும் தொனியில் சொன்னார். “சரிவர போய்க் கொண்டிருக்கின்றன.  ஆனால் அதற்கிடையில் நாம் சிறிதும் எதிர்பார்த்திருக்காத ஒரு நிகழ்வு நடந்து விட்டது பர்வதராஜனே. அதற்கு என்    நாக்கும், நல்லெண்ணமுமே காரணமாகி விட்டது

 

என்ன ஆயிற்று ஆச்சாரியரே?” என்று பர்வதராஜன் கேட்டான்.

 

பர்வதராஜனே. தனநந்தன் கொடுங்கோலனாக இருந்த போதும், மக்களிடம் சிறிதும் நற்பெயரைப் பெற்றிடாமல் இருந்த போதும் அவன் நீண்ட காலம் மகதத்தை ஆண்டவன். அவனைத் தண்டிப்பதும் சிறையிலடைப்பதும் நமக்குப் பெரிதல்ல என்ற போதிலும் மக்கள் எப்போதும் இது போன்ற விஷயங்களில் இளகிய மனம் படைத்தவர்கள். பாதிக்கப்படும் அவன் மேல் பச்சாதாபமும், தண்டித்த நம் மீது நல்லெண்ணக் குறைவும் ஏற்பட்டு விடுவதை நான் விரும்பவில்லை. அதனால் தனநந்தனை வனப்பிரஸ்தம் போகச் சொல்லிக் கட்டளையிட்டேன். இன்று சூரியாஸ்தமனத்திற்குள் மகத எல்லையை விட்டுச் சென்று விட வேண்டும் என்று உறுதியாகச் சொன்னேன். வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்ட அவன் தன் திருமணமாகாத மகள் குறித்து வருத்தப்பட்டான். நான் நல்லெண்ணம் காரணமாக அவன் மகள் யாரையாவது விரும்பினால் அவனையே அவளுக்குத் திருமணம் செய்து வைப்பது என் பொறுப்பு என்று வாக்களித்து விட்டேன். ஆனால் அவன் மகளிடம் பேசி விட்டு வந்து அவன் மகள் சந்திரகுப்தனை விரும்புகிறாள் என்று சொல்லி விட்டான்...”

 

பர்வதராஜன் சொன்னான். “எத்தனை சூழ்ச்சி பாருங்கள் ஆச்சாரியரே. அதற்கு நீங்கள் மறுத்து விட்டீர்கள் அல்லவா?”

 

(தொடரும்)

என்.கணேசன்